கடலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கார் ஓட்டுநருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேற்கு வன்னியர் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வாடகை கார் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் 2018ஆம் ஆண்டு கடலூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளியான விஜயகுமாருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.