நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதாச்சலம் காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கல்வீச்சில் ஈடுபட்ட விசிக-வினர் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.