கடலூர் நகரின் மையப்பகுதியில் கடந்து செல்லும் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் நேற்று (அக்.,14) துண்டாக வெட்டப்பட்ட கால் ஒன்று துர்நாற்றத்துடன் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சமூக விரோதிகள் கொலை போன்ற குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு மனித உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட கால் புவனகிரி பகுதியைச் சார்ந்த கணபதி என்ற நீரிழிவு நோயாளியின் சிகிச்சைக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வெட்டி எடுக்கப்பட்டது என்பதும், இதை ஆற்றங்கரை ஓரத்தில் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகம் வீசி எறிந்ததும் தெரியவந்தது.
கெடிலம் ஆற்றை ஒட்டியுள்ள இந்த வள்ளி விலாஸ் மருத்துவமனை ஆற்றுப் பகுதியை கழிவுகளை கொட்டும் இடமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அப்புறப்படுத்தப்படும் நோயாளிகளின் உடல் உறுப்புகளை அவ்வப்போது வீசி எறிந்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு புதிதல்ல. தற்போதும் மருத்துவமனை ஊழியர்கள் உடல் உறுப்புகளை எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மீண்டும் அங்கேயே குழிபறித்து புதைத்துவிட்டனர். கரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் காலக்கட்டத்தில், பொறுப்பற்ற முறையில் செயல்படும் இந்த தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயோமெட்ரிக் பாய்லர் எனப்படும் நுண்ணுயிர் அழிக்கும் கொதிகலன் மூலம் மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்க வேண்டிய மருத்துவ நிர்வாகம், பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்களுக்கு நோய்த்தொற்றை பரப்பும் வகையில் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதை இனியாவது மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அபராதம் விதிப்பதுடன், உரிய தண்டனையும் வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:வழக்குரைஞர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு - எட்டு பேரை 4 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!