கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்தவர் அமிர்தா. திருநங்கையான இவர், இளங்கலை வரை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் தங்களின் காதலை பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்களின் சம்மதத்தின் பேரில், லட்சுமணன்-அமிர்தா இருவரும் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் நேற்று காலை திருமணம் செய்துகொண்டனர்.
இது குறித்து அமிர்தா கூறுகையில், ``நான் பி.எஸ்.ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன். நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன். அப்போது ஃபேஸ்புக் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்தோம். இது குறித்து திருவந்திபுரத்தில் உள்ள என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால், கோயில் அலுவலர்கள் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.