தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 479 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த மூவருக்கும் கடலூரில் இருவருக்கும், அண்ணாகிராமம், கீரப்பாளையம், விருத்தாசலத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட எட்டு பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று இரண்டு பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 447 பேர் குணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.