கடலூர் மாவட்டம் கிள்ளை வடக்கு சாவடி பூக்கடை தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அச்சிறுவன் கடந்த மாதம் 29ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்றதாக கிள்ளை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவனும் சிறுமியும் வடலூரில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்க காவல்துறையினர் வடலூர் சென்றனர்.
இதற்கிடையில், கிள்ளை அருகே மண்டபம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இருவரையும் பிடித்து விசாரித்த காவல்துறையினர், சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.