கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் பகுதியிலுள்ள ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் 12 வகுப்பு மாணவன் மதன் என்கிற மாணிக்கராஜ். இவர் நேற்று (ஜூன் 9) மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மதன் நீரில் மூழ்கி காணாமல் போனார். அப்போது, அவருடைய நண்பர்களான சஞ்சய், அரிகிருஷ்ணன் ஆற்றுப்பகுதியில் கூச்சலிட்டு தனது நண்பனை தேடினர்.
ஆனாலும் இவரது நண்பர் மதன் கிடைக்கவில்லை 20 அடி ஆழமுள்ள உப்பனாற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதனை தேடி வந்தனர். பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் இன்று (ஜூன் 10) மாலை உப்பனாறு கரை ஓரம் மதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.