தமிழ்நாட்டில், தற்போது கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பரவுவதால் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள எஸ்.எஸ்.ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்த சபீக்(34) என்பவர் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் செளபர்ணீகா, இப்பகுதிக்குள் செல்லக் கூடாது என்பதை சபீக் கவனத்துக்கு கொண்டுச் சென்றார். அதைக் கேட்காத சபீக் இவ்வழியாக தான் செல்வேன் என்று செளபர்ணீகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சபீக், செளபர்ணீகாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பெண் உதவி காவல் ஆய்வாளர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல்துறையினர் சபீக்கை கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:‘2 முறை சோதனையில் இல்லை... 3ஆவது முறையில் கரோனா உறுதி’ - கீழமாத்தூருக்கு சீல்!