தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியிலுள்ள அட்டபாடி மட்டத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி கோவை சின்னவேடம்பட்டி பகுதியிலுள்ள அவரது பெரியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, அந்த சிறுமி ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார்.
அதே சமயம் சிறுமி அடிக்கடி கைப்பேசியில் ஒரு இளைஞருடன் பேசுவதைக் கண்ட சிறுமியின் பெரியம்மா சிறுமியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவ. 4ஆம் தேதி சிறுமி காணாமல் போயுள்ளார். இதனைத்தொடர்ந்து, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் பெரியம்மா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக சிறுமியின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (22) என்ற இளைஞருடன் அடிக்கடி கைப்பேசியில் பேசியது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, சிறுமியின் கைப்பேசி எண்ணை ட்ரேக் செய்த காவல் துறையினர், சிறுமி காட்டுமன்னார் கோவிலில் இருப்பதை உறுதிபடுத்தினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சிறுமியையும், சஞ்சீவியையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர், சிறுமியை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சஞ்சீவியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக சஞ்சீவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது!