கோயம்புத்தூர்: மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டியதன் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் படைப்பு அறம் சார்ந்த நேர்மையை இழந்துவிட்டார் என எழுத்தாளர் பாலமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து நடிகர் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த மார்ச்31ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ''விடுதலை'' திரைப்படம் தற்போது கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் சிவசுப்பிரமணியன் எழுதிய ''வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும்'' என்ற புத்தகங்களில் இடம்பெற்ற வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பழங்குடியின மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாகவும், ''விடுதலை'' படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில் எழுத்தாளர் பாலமுருகன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளார். அதில் ''விடுதலை சினிமாவும் சில பார்வைகளும்'' (ச.பாலமுருகன்) எனக் குறிப்பிட்டு, அவர் இவ்வாறு வெளிப்படையாக மனம் திறந்துள்ளார்.
அதில், ''வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்தபோது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னணி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என ஐயம் தெரிவித்தார். ஆனால், நான் வெற்றி மாறன் என்ற இயக்குநரை நேரில் அறிந்ததில்லை என்றபோதும்,
தொடர்ந்து நாவல்களின் மையக் கதையை திரைப்படமாக்கும் இயக்குநராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதாலும், மேலும் அந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்ததாலும் சில கடந்து போகும் காட்சிகளை தவிர்த்து, சோளகர் தொட்டியின் தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.
திரைப்படம் வெளிவந்த தினத்திலிருந்து பல்வேறு நண்பர்கள் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர். நான் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது. திரைப்படத்தின் மையக் கருவும் , கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின் புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது.
குறிப்பாக இத்திரைப்படத்தின் துவக்க காட்சியான ரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரைப் பிடிக்கும் காட்சியையும் எடுத்துவிட்டால் கதையின் களம் மலைப்பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம். அங்கு பணிபுரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர். சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர், சுபாஷ்.
கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல, மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு, உயிருடன் ஜீப்பில் கொண்டு போய், அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும்போது, ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலீஸ்காரன். இந்த பாத்திரத்தின் நீட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமாக இத்திரைப்படத்தின் நாயகன் நிற்கின்றான்.
திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப்பெண்ணின் குழந்தையைக் கொன்று விடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்குப் பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களைக் கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன.
சோளகர்தொட்டி என்ற நாவலின் காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாவலின் ஆன்மா வேறானது. அது நியாயத்தின் குரலாகவும், மனிதநேயத்தின் நியதிகளை கோரிய படைப்பாகவும் இருக்கின்றது. அது ஒரு தொடர் செயல்பாட்டின் வெளிப்பாடு. வெகு காலம் அம்மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம்.
ஆனால், வெற்றி மாறன் போன்ற இயக்குநர்கள் பல இளம் தலைமுறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர். அவர் ஒரு படைப்பை அணுகும் போது அறிவு நாணயத்தோடு அணுகி இருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்துக் கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பைச்சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்கவேண்டியதில்லை.
மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைத்தன்மையோடு உலகளாவிய அளவில் மனிதநேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது'' என இயக்குநர் வெற்றிமாறனுக்கும் விடுதலை படத்திற்கும் தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் காந்தாரா நடனமாடி அசத்திய கல்லூரி மாணவர்கள்!