கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதி கைத்தறி பட்டு சேலை தயாரிப்பில் தனி முத்திரை பதித்து வருகிறது. சிறுமுகை வட்டாரப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் தனியார் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் இங்கு நெசவுத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி பட்டு சேலை, சாப்ட் சில்க், சில்க் காட்டன், காட்டன் சேலைகளை தயாரித்து வருகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்புது ரகங்களை தயாரிக்க 200க்கும் மேற்பட்ட டிசைன்களை தனியார் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.
தனடிப்படையில், கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தங்கள் கற்பனைத்திறனில் வாடிக்கையாளர்கள் மனதை கவரும் வண்ணம் பல்வேறு வர்ணங்களில் கைத்தறி பட்டு சேலைகளை புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தனியார் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தாங்கள் தயாரித்த கைத்தறி பட்டு சேலைகளை சிறுமுகை சில்க்ஸ் பஜாரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு சேலை விற்பனை கடைகளுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சில்க்ஸ் பஜாரில் உள்ள கடைகளில் கைத்தறி பட்டு சேலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
கடைகளில் கைத்தறி பட்டு சேலை, சாப்ட் சில்க், சில்க் காட்டன், காட்டன் மற்றும் பேன்சி ரகங்களாக சுத்த லினன் சேலைகள், ரூபியான் சேலைகள், டசர் சில்க் சேலைகள் உள்பட மகளிர் மனதை கவரும் வண்ணம் புது புது ரகங்களில் சேலைகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. சாப்ட் சில்க் சேலைகளை பெண்கள் அணிய அதிக அளவு விரும்புவதால் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவு சாப்ட் சில்க் சேலைகளை தயாரித்து வருகின்றனர்.
இந்தாண்டு வருகிற தீபாவளி பண்டிகை யையொட்டி கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கிய 50க்கும் மேற்பட்ட வடிவமைப்புக்களில் நெசவுத் தொழிலாளர்கள் கோரா காட்டன், மென்பட்டு சேலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோ_ஆப்டெக்ஸ் நிறுவனம் கூட்டுறவு சங்கங்களில் பட்டு சேலைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோ_ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு கோ_ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இது குறித்து காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் தண்டபாணி கூறுகையில், “சிறுமுகை பகுதி கைத்தறி நெசவுக்கு பெயர் போனது. இங்கு நெசவு செய்யப்படும் கைத்தறி பட்டுகள் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பவர் லூமில் நெசவு செய்யப்படும் சேலைகளை காட்டிலும் கைத்தறி சேலைகள் எடை குறைவாக இருப்பதால் நாள் முழுவதும் அணிந்து கொள்ளலாம். அதே சமயம், வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன்கள் இதில் வடிவமைத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கைத்தறி சேலைகளை விரும்பி வாங்குகின்றனர்” என்றார்.
கைத்தறி பட்டு சேலை வாங்க வந்த பெண்மணி கூறுகையில், “பவர் லூம்களில் நெசவு செய்யப்படும் சேலைகளை காட்டிலும் கைத்தறிகளில் நெசவு செய்யப்படும் சேலைகள் உடுத்துவதற்கு எளிதாக உள்ளது. எங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேலைகளின் டிசைன்களை வடிவமைத்துக் கொள்ளலாம். அதேசமயம் மற்ற துணிக்கடைகளை காட்டிலும் இங்கு குறைவான விலையில் தரமான கைத்தறி பட்டு சேலைகள் கிடைக்கிறது” என்றார்.
சிறுமுகை வட்டார பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் திருக்குறள் சேலை, மயில் தோகைசேலை, மணமக்கள் போட்டோ பதித்த சேலை, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய தலைவர்கள், சீன அதிபர் ஆகியோரின் உருவங்களை திரைச் சீலையில் அற்புதமாக அழகாக வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி பர்சேஸ்- போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்