கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைகால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (மே.9) முதல் தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று (மே.9) கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. நான்கு வனசரங்களில் அமைக்கப்பட்டுள்ள 62 நேர்கோட்டுப் பாதையில் 130-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் வனப்பகுதிக்குள் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு சென்று அங்குள்ள மாமிச உண்ணி, தாவரம் உண்ணி விலங்குகளையும், அதேபோல் வனவிலங்குகள் எச்சம், கால்தடம் ஆகியவையும் கணக்கிடப்படுகிறது.
அடுத்த மூன்று நாள்களுக்கு 62 நேர்கோட்டுப் பாதையில் சென்று, வன விலங்குகளுக்குத் தேவையான உணவு வகைகள், வாழ்விடங்கள் போன்றவை கணக்கு எடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவமலை பகுதியிலும் இன்று வனத்துறை ஊழியர்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்திற்குள் சிறுத்தையின் கால் தடம், மரங்களில் உள்ள கீறல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. ஆறு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பின் பதிவுகளின் அறிக்கை தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுப்பப்படும் என்று வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனித நேய முயற்சி: கரோனா நோயாளிகளுக்கு ஆட்டோவில் ஆக்ஸிஜன் சேவை