கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பகுதியில் முன்னங்காலில் காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுற்றி திரிந்த்து. காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். கோவை சாடிவயல் பகுதியில் இருந்து வெங்கடேஷ் மற்றும் சுயம்பு என்ற இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், காயங்களுடன் இருந்த காட்டு யானை அடர்வனப்பகுதிக்குள் சென்றது. சரிவான பகுதியில் யானை இருந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியினை வனத்துறையினர் கைவிட்டனர். காட்டு யானை மீண்டும் சமதளப் பரப்புக்கு வரும் வரை காத்திருப்பது என வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
மேலும் ஏற்கனவே காலில் காயத்துடன் இருந்த காட்டு யானை , வியாழக்கிழமை அடர் வனப்பகுதியில் 15 அடி உயர பாறையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தது. யானையை பின் தொடர்ந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் யானை உயிரிழந்து குறித்து அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே காயங்களுடன் இருந்த யானை பாறையில் இருந்து கீழே விழுந்ததால் வயிறு உட்பட பல இடங்களில் காயம் அடைந்து உயிரிழந்தது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.யானையின் உடலை நாளை(செப் 19) உடல்கூறு ஆய்வு செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.