கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி கண்ணப்பன் நகரில் கனமழை காரணமாக தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்தச் சம்பவத்தில் ஆனந்தன் (38), நதியா (35), மகன் லோகராம் (10), அட்சயா (6), அறுக்கானி (40), ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), ருக்குமணி (42), திலகவதி (38), பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகிய 17 பேர் உயிரிழந்தார்கள்.
இந்தக் கோர சம்பவத்தில் பலியான நிவேதா, ராமநாதன் ஆகியோரின் தந்தை செல்வராஜ் "எல்லாத்தையும் இழந்துட்டேன், இனி எதுவுமில்லை" என்று கூறி தனது இரண்டு பிள்ளைகளின் கண்களைத் தானமாக வழங்கினார். அதேபோன்று "நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கப்பாதான் மேல போயிட்டாரு, எனக்கு புக்கும் நோட்டும் கொடுத்தீங்கனா எங்க அம்மாவ காப்பாத்தி விட்டிருவேன்" என்று தொலைக்காட்சிகளில் சிறுமி அழுத காட்சி எவராலும் மறக்க முடியாது.
பட்டியலின மக்களின் உயிருக்கும், உயிரற்ற உடலுக்கும் கூட இங்கு மரியாதை இல்லை என்பது புலனாகிறது. இந்தத் துயர சம்பவம் நடந்து 10 மாதங்களை கடந்துவிட்டன. மறக்க முடியாத வடுவை தங்களது இதயத்தில் இன்றும் சுமந்துகொண்டிருக்கின்றனர், நடூர் மக்கள். இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், பலமுறை மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டும் இதுவரை தங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மகள், மகனை பறிகொடுத்த கூலித்தொழிலாளி செல்வராஜ், "என் மனைவி இறந்து பத்து வருசமாச்சு. நான் டீ கடையில் வேலை செஞ்சிட்டு இருந்தேன். மகனும், மகளும் தம்பி வீட்டில் இருந்தாங்க. சுவர் இடிந்து விழுந்து இறந்துட்டாங்க. தங்க வீடும் இல்லை, அனாதைபோல் தெருவில் படுத்து உறங்குகிறேன். வீடுகட்டித்தருவதாக சொன்ன அரசு அதையும் தரவில்லை. நாங்க ஏழைங்க என்ன பண்ண முடியும். என் பிள்ளைங்க உயிரே போச்சு. ஏதாவது வாட்ச்மேன் வேலை வழங்கினால் நல்லது" என்றார்.
தனது இரண்டு சகோதரர்களின் குடும்பத்தை இழந்த குடும்பத்தினர், "திருவிழா மாதிரி இந்த இடத்துல பிள்ளைங்க விளையாடி திரியும். இன்னைக்கு வெறிச்சோடி கிடக்கு. இடிந்த சுவர் இருந்த வடு தெரியாத அளவுக்கு மறுபடியும் கட்டிட்டாங்க. சம்பவம் நடந்து ஒரு வருஷம் ஆச்சு, இந்தா வரும், அந்தா தருவோம் சொல்றாங்க இதுவரைக்கும் யாரும் வரலை. எங்கே போய் சாமி சொல்றது நாங்க. சொல்லாத இடமில்லை, கேட்கவேண்டிய இடத்தில் கேட்டாச்சு. ஒரு பதிலும் இல்லை. இப்பவரைக்கும் வாடகை வீட்டில்தான் வாழ்றோம்" என வேதனையுடன் தெரிவித்தனர்.
தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் கூறுகையில், "17 பேர் பலியானதற்கு 14 பேரின் குடும்பத்தினருக்கு மட்டுமே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேரின் குடும்பத்தாருக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. மூன்று பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேர் குடும்பத்துக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது என்பதை அரசு உணர மறுக்கிறது. வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த நிலையில் வரக்கூடிய டிசம்பர் 2ஆம் தேதிக்குள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதலமைச்சர் கோவை வருகின்றபொழுது தமிழ் புலிகள் கட்சி சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!