கோயம்புத்தூர்: மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தில் விவசாயி கோபால்சாமி என்பவர் தனது நிலத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க சென்றார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோருடன் கோபால்சாமிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபால்சாமி சாதிய ரீதியாக பட்டியல் இனத்தை சார்ந்த கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக காணொலி வெளியானது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து விவசாயி கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமியை சாதி ரீதியாக நடத்தியதாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த விவசாயி கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து முத்துசாமி புகாரின் பேரில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கோபால்சாமி தலைமறைவானர்.

முத்துச்சாமி ஆபாசமாக பேசியது அம்பலம்
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட காணொலி பதிவின் மற்றொரு பகுதி சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், வாக்குவாதத்தில் ஈடுபடும் கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி தாக்கும் காணொலி காட்சிகள் வெளியாகின.
அதில், முத்துசாமி காணொலி எடுப்பதை அறிந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, அலுவலர்கள் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் தவறான தகவல்களை அளித்ததால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அமைப்பினர் வலியுறுத்தினர்.

நேற்று முன்தினம் (ஆக.17) கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (ஆக.19) அன்னூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

முத்துசாமியை நீக்க வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமியை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும். கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
இதையும் படிங்க: பொய் வழக்கில் கைதான மகன்: நியாயம் கேட்டு தீக்குளிக்க முயன்ற தாய்