கோயம்புத்தூர்: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நெசவாளர் காலணியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தெற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து இறகுப்பந்து மைதானத்தைச் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த மைதானத்தை, இன்று (டிச.25) வானதி சீனிவாசன் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர், அங்குச் சிறிது நேரம் இறகுப் பந்து விளையாடிய அவர் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "காலநிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகிறது. கார்பன் சம நிலையை இலக்காக வைத்து உலக நாடுகள் செயல்பட்டு வருகிறது. அதில், இந்தியாவும் கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருகின்றனர். இயற்கையை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.
தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பிற்கு நிதி அளிப்பு குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாகச் சொல்லியுள்ளார். நாளை (டிச.26) தூத்துக்குடிக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார். மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடாக உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார்.
பண அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு, மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வரைப் பிரதமர் இரவில் சந்தித்தது பொறுப்பற்ற தன்மை என்ற வைகோவின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், "பிரதமரைச் சந்திக்க முதல்வர் செல்லவில்லை. இந்தியா கூட்டணியின் கட்சி கூட்டத்திற்குச் சென்றவர், அப்படியே பிரதமரைச் சந்தித்து வருகிறார்.
பிரதமருடன் சந்திப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடக்கூடியவை. ஆனால், முன் அனுமதி இல்லாவிட்டாலும் வெள்ள நேரத்தில் வருகை தந்த முதல்வரைப் பிரதமர் நேரம் ஒதுக்கிச் சந்தித்து வெள்ள பாதிப்புகளைக் கேட்டறிந்தார். இதில், என்ன பொறுப்பற்ற தன்மை உள்ளது" என்று கூறினார்.
மேலும், பேசிய அவர் தயாநிதிமாறன் வட மாநில தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாடு குறித்த கேள்விக்கு, "திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களைத் தரக்குறைவாகப் பேசுவது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக, இதுபோன்று பல்வேறு சமயங்களில் வட மாநில தொழிலாளர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பிறகு மன்னிப்பு கேட்பதுமாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு பண்ணுணாங்களா? மக்களை பார்த்தார்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். பின்னர், தேர்தலில் போட்டியிட்ட தொகுதி என்பதால் மக்களைச் சந்தித்து இருப்பார். மக்களைச் சந்தித்து யார் வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம். மேலும், வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானதைச் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி