கோவை மாவட்டம், மதுக்கரைப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் செல்போன் டவரில் சர்வீஸ் செய்வதற்காக வந்துள்ளோம் என்று வெங்கடேசனிடம் கூறிவிட்டு, அதில் உள்ள வயர்கள், இயந்திரங்களைக் கழற்றியுள்ளனர். அதில், சந்தேகமடைந்த வெங்கடேசன் செல்போன் டவர் நிர்வாகத்திற்கு அழைத்து விசாரித்தார்.
அப்போது, செல்போன் டவர் நிர்வாகிகள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், இருவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின், அவர்களை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில் அவர்கள் பெயர் மணிகண்டன் (29), ஜோதிராஜ் (34) என்பதும்; இருவரும் செல்போன் டவர் பாகங்களைத் திருடி விற்க வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் ஒயர்லெஸ் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு!