கோவை: துடியலூர் அடுத்த ராக்கிப்பாளையம் பிரிவில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு நேற்று (ஜன. 3) முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வந்த இளைஞர்கள் இருவர், ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு கொள்ளை முயற்சி குறித்து தகவல் சென்றுள்ளது. பின்னர் உடனடியாக இதுகுறித்த தகவலை உள்ளூர் வங்கி ஊழியர்கள் துடியலூர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் கொள்ளை முயற்சி
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் திறக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் தள்ளாடியபடியே ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரும் சம்பவ இடத்துக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (24), பிருந்தாவன் பாகரதி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து, ஏடிஎம் மையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் மதுஅருந்திவிட்டு போதையில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு