கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி மலைப் பாதையில் 57 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சுற்றுலா வந்த தனியார் பேருந்து திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக 57 பேர் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து 52 மாணவ மாணவிகள் உள்பட 57 பேர் கடந்த அக்டோபர் 6 அன்று இரவு 11.30 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று காலை ஊட்டியை சென்றடைந்து, சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு மீண்டும் இரவு சுமார் 8 மணிக்கு ஊட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் அருகே சுற்றுலாப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் வலது பின்புற டயரில் தீ பற்றியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டதும் பின்னால் வந்த வாகன ஓட்டுநர் தெரிவித்ததன் பேரில், பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பேருந்தில் வந்த மாணவ மாணவிகளை பேருந்தில் இருந்து பத்திரமாக இறக்கி உள்ளார்.
இந்த நிலையில், டயரின் பின் சக்கரத்தில் பற்றி மளமளவென பற்றிய தீ பேருந்து முழுவதும் எரியத் தொடங்கியது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் அன்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியிலிருந்து வந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்த்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு! நாடாளுமன்றத் தேர்தல் யுக்தியா? காங்கிரஸ் போடும் திட்டம் என்ன?