கோயம்புத்தூர்: தமிழ்நாடு மின்சார வாரிய இன்ஜினியர் ஊழியர் சங்கத்தினர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (பிப்.4) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
எங்களின் பிரதான கோரிக்கை தமிழ்நாடு அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் என்பது, கடந்த 2010ஆம் ஆண்டு அரசு ஆணை 100இன் கீழ் தமிழ்நாடு மின்வாரியம் பிரிக்கப்பட்டு, இரண்டு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. மின்வாரியத்தின் சொத்துக்களும் கடன்களும் அந்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் பணியாளர்களுக்கு மட்டும் மாற்றத்திற்கான உத்தரவு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
இதனால் பணியாளர்களுக்கு உறுதி அளிக்கின்ற வகையில், அவர்களது பணிஓய்வு காலப் பலன்கள், ஓய்வூதியம் போன்றவற்றை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு, மின் வாரியம், தொழிற்சங்கங்கள் மூன்றும் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மின்சாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்சார வாரியம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, மின்சாரச் சட்டம் 2003-ஐ அமல்படுத்திய பின்னர் மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தனியார் மின் உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டு வரை இவர்களால் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அரசு மீண்டும் மின் வாரியத்தை தனியாருக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த நஷ்டத்தை ஈடு செய்கின்ற வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வாரியம் முடிவெடுத்துள்ளது. தேர்தல் காரணமாக மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை.
ஆகவே இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு கண்டிப்பாக இருக்கும். மின் கட்டண உயர்வு இருந்தாலும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது. எனவே தனியார் மின் உற்பத்தியாளர்களை அப்புறப்படுத்திவிட்டு, அரசு மின் உற்பத்தியாளர்களை பணியமர்த்தினால் மட்டுமே நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க முடியும்.
மின்வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை அரசு எவ்வித நஷ்டத்தையும் சந்திக்க வில்லை. தனியாருக்கு கொடுத்த பின்னர் மின் உற்பத்தியாளர்களால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மின் விநி்யோகத்தையும் தனியாருக்கு கொடுப்பதை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்து வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த மின் கட்டண உயர்வால் வாரியத்திற்கு எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. வாரியத்தின் தவறான செயல்பாடுகளால் பொதுமக்களே பாதிக்கப்படுவர். அத்தோடு இதை நம்பி உள்ள மின்வாரிய தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தினை செயல்படுத்தி தற்போது பணியில் உள்ள ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தினை அரசு உத்திரவாதத்துடன் நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (பிப்.5) மதுரையிலும், 6ஆம் தேதி நெல்லையிலும் 11ஆம் தேதி சென்னை, 19ஆம் தேதி விழுப்புரம், 20ஆம் தேதி திருச்சியில் நுழைவாயில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் மேம்பால நீட்டிப்பு பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்