கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பந்தைய சாலை சீரமைப்பு, ஆர்.எஸ்.புரம் சாலைகள் சீரமைப்பு, செல்பி பாய்ண்ட் மற்றும் மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு, குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நாளை (ஜன.5) திறந்து வைக்கிறார். இதனையடுத்து, திருவள்ளூவர் சிலை, அப்பகுதியில் அமைந்துள்ள குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
அதேபோல் உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், அறிவுசார் மையம், உக்கடம் பெரிய குளத்தில் ஜிப் சைக்கிள் உள்ளிட்டவையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் முத்துசாமி தகவல்!