கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிப். இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு சோதனை செய்தனர். அப்போது இவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில் ஆசிப் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று(அக்.13) ஆசிப்பை பார்ப்பதற்காக அவரது தந்தை சிறை வளாகத்திற்கு வந்த போது ஆசிப் தனது தந்தையுடன் பேசுவதற்கு முறையாக அனுமதி தரவில்லை எனக் கூறி, அங்கு இருந்த சிறை அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆசிப் மீது கொலை மிரட்டல், அரசு அலுவலரை பணி செய்த செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆசிப் வாக்குவதாகம் செய்த வீடியோ பதிவும் போலீசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.