கோயம்புத்தூர் மாவட்டம் தீத்திபாளையம், மாதம்பட்டி, பச்சாபாளையம், ஆலந்துறை உள்ளிட்ட பத்து ஊராட்சிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது, 300 ரூபாய் மதிப்புள்ள 12 வகையான காய்கறிகளும் வழங்கப்பட்டன.
மேலும், மதத்வாயபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஓடையில் உடைப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில், முதலமைச்சர் அறவித்தபடி ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது. 45 வட்டார தோட்டக் கலைத் துறை மூலம் 15 வாகனங்களில் காய்கறிகள் வீடுதோறும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா உணவகத்தில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்டோர் உணவருந்துகின்றனர். வெளிமாநிலத்தவர்கள் 18,000க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவசியமில்லாமல் வெளியே வரக்கூடாது. பொதுமக்கள் இந்த நோய்த்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
98 விழுக்காடு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால், 2 விழுக்காடு பேர் இன்னும் கரோனா வைரஸ் தொற்று குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்கள். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிக்காக முதலமைச்சர் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறார். பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கரோனா!