கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாடு அரசுதான் பராமரிப்பு செலவுகளைச் செய்து வருகிறது. சிறுவாணி அணையில் வறட்சிக் காலங்களில் தண்ணீர் எடுக்கப் பயன்படும் நிலத்தின் அடியிலுள்ள ஒரு குழாயை கேரள அரசு கடந்த 2014ஆம் ஆண்டு மூடியது.
இந்நிலையில், மற்றொரு குழாயை மூடும் பணியை கேரள அரசு தற்போது செய்து வருகிறது. இது குறித்த செய்தி நேற்று ஈடிவி பாரத்தில் வெளியானது. இதனையடுத்து வறட்சிக் காலங்களில் தண்ணீர் எடுக்கப் பயன்படும் குழாயை அடைக்கும் கேரள அரசின் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.
ஊரடங்கைப் பயன்படுத்தி கேரள அரசு குழாயை மூடும் பணியை மேற்கொள்வதாகவும், இதனால் வறட்சிக் காலங்களில் கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்களை அணைக்குச் செல்லவிடாமல் கேரள அலுவலர்கள் தடுப்பதாகவும், தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கேரள அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரள அரசு மீண்டும் அடாவடி: சிறுவாணி அணையின் பழைய குழாயை மூடும் பணி தீவிரம்!