Criticism against GST: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கோப்மா, டாக்ட் போன்ற அமைப்பின் நிர்வாகிகள், மகேந்திரா பம்ஸ் நிறுவன உரிமையாளர் மகேந்திர ராமதாஸ், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ஜிஎஸ்டி வரிச்சட்டம்தான் தொழில்களை முடக்குகின்றது எனவும், செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். போராட்டத்திற்கு தயாராவோம் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் மாநாடாக இது இருக்கும் எனவும், ஜிஎஸ்டி கவுன்சிலில் சரியான முடிவு இல்லை என்றால் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில், பஞ்சாலை தொழிலை பாதுகாக்க பஞ்சின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும், காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஊழல் படிந்த நிறுவனமாக மாறி இருக்கிறது, அதன் நிர்வாக அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்படவேண்டும், ஆண்டுக்கு 2 கோடி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக அறிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.
இதனைதொடர்ந்து மாநாட்டில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், ஒரு துறையில் ஏற்பட்ட சரிவு அடுத்தடுத்து வேறு துறைகளுக்கு பரவுவதாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார். ஜிடிபி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும், இது போன்ற சூழலில் வரி விதிக்க முடியாமல் வெளிநாட்டில் கடன் வாங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாகவும் சாடினார். பகுதி பகுதியாக வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறிய அவர், இது தொடரும் போது, இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் இழக்கும் சூழல் மிக விரைவில் ஏற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.