திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதிக்கு கடந்த மாதம் கட்டட வேலைக்காக சென்றிருந்தனர்.
இந்த சூழலில் இந்தியாவில் கரோனா தலை தூக்கியுள்ளதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை கடைபிடித்துவருகின்றன. இதனால் கலக்கம் அடைந்த தொழிலாளர்கள் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் நடந்தும், லாரிகளில் சவாரி செய்தும் தமிழ்நாடு எல்லைக்கு வந்தனர். அவர்களை சோதனை செய்த பிறகு தமிழ்நாடு மருத்துவ குழுவினர் அவர்களை மாநிலத்திற்குள் அனுமதித்தனர்.
பொடிநடையாக பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்த தொழிலாளர்கள் செய்வதறியாது நின்றனர். இதை அறிந்த வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களுக்கு பிஸ்கட்டுகளும் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கி அவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர் கேரளாவில் மாடுகளை இறக்கிவிட்டு காலியாக வந்த திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரியை நிறுத்திய காவல் துறையினர் கட்டட தொழிலாளர்களை திருச்செங்கொடுவரை இறக்கி விடுமாறு லாரி ஓட்டுனரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அனைவரும் அந்த லாரியில் ஏறி சென்றனர். நிர்கதியாய் நின்றவர்களை லாரியில் ஏற்றிச்சென்ற அந்த ஓட்டுநரின் மனிதநேயத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.