கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு காரணங்களால் 18 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் அடுத்தடுத்த வாரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு எட்டு யானைகள் உயிரிழந்தன. உயிரிழந்த யானைகள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு இறந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், கோவை வனக் கோட்டத்தில் யானைகளின் உயிரிழப்பை கட்டுப் படுத்தும் வகையிலும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கோவை வனச் சரகத்திற்குட்பட்ட மருதமலை கெம்பனூர் அனுபவி, மாங்கரை பொண்ணுத்து அம்மன் கோயில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 36 இடங்களில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவை வனத்துறையினருடன் இணைந்து ஆனைமலை புலிகள் காப்பக ஊழியர்கள் கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இந்த கேமராக்கள் மூலம் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய முடியும். இதன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை அல்லது காயமடைந்த நிலையில் காணப்படும் யானைகளை கண்டறிந்து அவற்றிற்கு உடனடியாக சிகிச்சையளிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை!