கோவை: தமிழ்நாட்டில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று (ஜன.6) சோமனூரில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர், 'அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஏற்கனவே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு வந்த 'தாலிக்கு தங்கம் திட்டம்', வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் 'ஸ்கூட்டி வழங்கும் திட்டம்' ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
கடுமையான மின் கட்டண உயர்வால் சூலூர் தொகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், அனைத்து இடங்களிலும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டதால், கூலித் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கிற்கு கொடுக்கின்றனர். சொத்து வரி, பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இலங்கையில் ஒரே குடும்பம் ஆண்டதால் பல்வேறு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அது போன்ற, சூழல் இங்கேயும் ஏற்பட வாய்ப்புள்ளது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்பு வகிக்கும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறையால் சூலூர் தொகுதி கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும், கடைகள் திறந்தவாறு உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விசைத்தறிக் கூடங்கள், தற்போது உயர்ந்த மின் கட்டணத்தால் பல மடங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைத்தறி இயங்காமல் உள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே, இந்த அரசு மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில், விசைத்தறியாளர்களுக்கு கடனுக்கான வட்டித் தொகை ரத்து செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மின் கட்டண உயர்வு காரணமாக 2 விசைத்தறி கூடங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் கண்டித்து தான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை; கொடுக்காத வாக்குறுதியாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை வழங்கியுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு விவகாரம்: ஆர்.என்.ரவி கூறியதில் தவறில்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச்