கோயம்புத்தூர்: தீபாவளி திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று கல்லூரிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்படப் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கல்லூரிகள் மாலையுடன் முடிந்த நிலையில் மாணவ மாணவிகள் சொந்த ஊருக்குப் பேருந்துகளிலும், ரயில்களிலும் திரும்பி வருகின்றனர். கோவையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே மாணவர்கள் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அப்பேருந்து நிலையத்திற்கு வந்த சேலம் செல்லும் அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழையும் முன்பே மாணவர்கள் பேருந்தை வழிமறித்தவாறு பேருந்தில் அவர்களது உடைமைகளைக் கொண்டு இடம் பிடித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் திகைத்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி ஒழுங்கு படுத்த வேண்டுமெனவும் கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்’ நெகிழ வைத்த அறக்கட்டளை..!