கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் இன்று (டிசம்பர் 31) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கோவையில் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
பாதுகாப்புப் பணிகளில் ஆயிரத்து 50 காவல் துறையினர் ஈடுபட உள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர், சாலைகளில் சாகசம் செய்வோர் போன்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும்.
கோவை மாநகரில் போக்சோ வழக்குகளில் கைதுசெய்யப்படுவோருக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வாகன சோதனைகளின்போது எடுக்கப்படும் புகைப்படங்களின் மூலம், பழைய வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். அவர்களில் பலர் தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
குட்கா, புகையிலை, கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்யப்படும்போது, அதனை அவர்களுக்கு விற்பனை செய்த மொத்த கொள்முதல் விற்பனையாளர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறை சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது இது தொடர்பாக பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் இருபிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: 'மீண்டும் மிதக்கும் சென்னை! விடியா அரசின் அமைச்சர் ராஜினாமா செய்வாரா?'