கோவை: எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அலியா தர்காவில் அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ் மகன் உசேன், 'அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வர வேண்டியும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் வரும். அதற்காக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி 72 தர்காக்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது. ஆன்மிகப் பயணமாக நான் 39ஆவது மாவட்டமாக கோவைக்கு வந்து பிரார்த்தனை செய்தேன். 38 மாவட்டங்களைவிட கோவையில் தொண்டர்கள் சமத்துவமாக வந்து பிரார்த்தனை செய்துள்ளனர்.
மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும். 50 ஆண்டுகளில் மக்களுக்கு அதிக திட்டம் தந்தது, அதிமுக அரசு தான். மற்ற எந்த கட்சியும் இல்லை. உலமாக்கள் ஓய்வூதியத் திட்டம் எம்.ஜி.ஆர். தந்தார். இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் என சிலர் சொல்லலாம். ஆனால், இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பான இயக்கம் அதிமுக அரசு தான்” எனத் தெரிவித்த அவர், இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களைப் பட்டியலிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, 'நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார்’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:தாய்ப்பால் தானம்: சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கோவையைச் சேர்ந்த பெண்!