கோயம்புத்தூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை.28) போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கறுப்பு உடை அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.
திமுக அரசின் அலட்சியம்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தது. ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை.
நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பது போன்ற எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக இந்த அரசு இருக்கிறது. கரோனா தொற்று தடுப்பில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. திமுக அரசு வந்த பிறகு ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிமுகவினர் எதற்கும் அஞ்சோம்
டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கோரிக்கை விடுத்தனர். இது போன்ற செயல்களை செய்யாமல் விட்டு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, காவல்துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடுகிறது.
காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். காவல்துறை மிரட்டலுக்கு அதிமுகவினர் பயப்படமாட்டோம். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கிறது” எனப் பேசினார்.
குழப்பத்தில் உளறிய வேலுமணி
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கரோனா இறப்பை இந்த அரசு குறைத்துக் காட்டுகிறது. இவ்வளவு இறப்பிற்கும் காரணம் அரசு தான். காவல் துறை நடுநிலையாக செயல்பட வேண்டும். அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது” என்றனர்.
தொடர்ந்து பழக்கதோஷத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் டெல்லி சென்றனர் எனக் குறிப்பிட்ட வேலுமணி, சுதாரித்துக் கொண்டு பின் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி சமாளித்தார்.
இதையும் படிங்க: மக்களை திசை திருப்ப திமுக முயற்சி - எடப்பாடி பழனிசாமி