நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இரண்டரை லட்சம் பேருக்கு நாட்டுக் கோழிகள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் பேரூராட்சி சூளேஸ்வரன் பட்டி பேருராட்சி, சந்திராபுரம், கோலார்பட்டி உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 1500 பேருக்கு தலா 25 நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு ஆண்டும் 120 கால்நடை பராமரிப்பு கிளை நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அனுமதியளித்துள்ள நிலையில் இந்தாண்டு 75 கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியை பொறுத்தவரை தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் கறிக்கோழி உற்பத்தியில் முன்றாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடிக்கும். இந்தாண்டு கால்நடை மருத்துவக் கிளை நிலையங்கள் 75 மருந்தகங்களாகவும், மருந்தகங்கள் ஐந்து மருத்துவமனைகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் துணை இயக்குனர் மற்றும் மருத்துவர்கள் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன் பேரூராட்சி கழக செயலாளர் நரி முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர் .