தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து கடந்த இரண்டு மாதங்களாக நோய்த்தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவையில் தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் இரண்டு மாநில ஊழியர்களும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இரு மாநில சோதனைச் சாவடிகளிலும் இ-பதிவு விண்ணப்பங்கள் இருந்தால் மட்டுமே வாகனங்கள் எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதே சமயம் இரு மாநில எல்லைகளிலும் பொதுமக்கள் நடந்து சென்றே பேருந்துகளில் ஏறி பயணிக்கின்றனர். தற்போது கேரள மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நடந்து வரும் பொதுமக்களுக்கு இ-பதிவு கேட்கப்படுவதில்லை என்பதால், தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படக் கூடும் என்று பலரும் எண்ணுவதால், அவர்களுக்கும் இ-பதிவை கட்டாயப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.