கோயம்புத்தூர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்து எங்கு பார்த்தாலும் அதிகரித்து வருகிறது. தற்போது அவசர நிலையில் சாலையைக் கடக்க முயற்சி செய்து உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையிலுள்ள நகரப்பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்ல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையைக் கடந்து வருகின்றனர்.
எனவே, சாலை விபத்தைத் தடுக்கும் நோக்கிலும், பாதசாரிகளுக்கு உதவும் வகையிலும் இன்னர் வீல் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களே பயன்படுத்தும் வகையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டு, அதன் துவக்க விழா இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
இதில் கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மதிவானன் பங்கேற்று சிக்னல் செயல்பாட்டை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அதிகளவில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதி என்பதால், இங்கு ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டதாகவும், இந்த சிக்னல் முழுக்க முழுக்க பொதுமக்களே உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.
120 விநாடிகள் இடைவெளியில் பொதுமக்கள் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி பச்சை விளக்கை எரிய வைத்து சாலையைக் கடக்கலாம் என்றும்; இதேபோல் மாநகரில் அதிக அளவில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதிகளில் இதுபோன்ற ஸ்மார்ட் சிக்னல்கள் அமைக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ல் தொடக்கம்... பொது சிவில் சட்ட மசோதா தாக்கலா?
கோவை மாநகரில் சிக்னல் இல்லா போக்குவரத்தினை நடைமுறைப்படுத்திய பிறகு சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், எங்கெல்லாம் சிக்னல்கள் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் உள்ளது என ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கோவையில் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் கடந்த நான்கு நாட்களாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்; வரும் வாரம் முதல் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிப்பது கடுமையாக்கப்படும் எனவும் கூறினார்.
ஸ்மார்ட் சிக்னல் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''முன்பு சாலையைக் கடக்க சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. தற்போது ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால் அவசரமாக செல்வோர் அதனைப் பயன்படுத்தி சாலையை எளிதில் கடக்கலாம். வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் இந்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் உபயோகமாக உள்ளது. இந்த முறையை நகரில் அனைத்து சிக்னல்களிலும் செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்'' எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு முறைகேடை கல்லூரி ஒப்புக்கொள்ளாவிட்டால் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் - எச்சரித்த உயர்நீதிமன்றம்