பொள்ளாச்சி அருகே நஞ்சே கவுண்டன்புதூரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் எலும்புக்கூடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மேற்கு காவல்நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்துவந்த காவல் துறையினர், எலும்புக்கூடுவை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், எலும்புக் கூடின் ஒரு பகுதியை சென்னை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தனர். தனியார் காவலாளி உடையில் இருப்பவர் பல மாதங்களுக்கு முன் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. தலை, கால், கை எலும்புகள் மட்டும் உள்ளதால் இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த வருடம் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்தும் விசாரணை செய்துவருகின்றனர். ரயில்வே தண்டவாளம் பகுதியில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.