கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்காக வந்த தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் விமானப்படை அலுவலர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் சனிக்கிழமை (செப்டம்பர் 25) இரவு கைதான சக அலுவலர் அமிதேஷ் ஹர்முக் உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது 376இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று (செப். 27) கோயம்புத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் அலுவலரும், விமானப்படை அலுவலர்களும் முன்னிலையாகினர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும்போது விமானப்படை அலுவலர்கள் கைதான அமிதேஷை தாங்கள் காவலில் எடுத்துக்கொள்ள கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை கோயம்புத்தூர் மாநகர காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கேட்டுள்ளார். இந்நிலையில் கைதான அமிதேஷ் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல்செய்திருந்தார்.
இதனிடையே, சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த விமானப்படை அலுவலரை காவல் துறையினர், மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:'தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப்படுத்தவில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்