கோவை மாநகராட்சியில் கூலி உயர்வை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வரும் நிலையில், இது குறித்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூலி உயர்வு குறித்த தீர்மானம் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 25 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி இருந்தனர். அதன்படி நேற்றைய தினம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அறிவித்தபடி, அக்.25 தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதனால், மாநகர் முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் தேக்கமடைந்து உள்ளன.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று (அக்.26) கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், கூலியை உயர்த்தி தர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்று அமலாகிறது புதிய மோட்டார் வாகனச் சட்டம்... வாகன ஓட்டிகளே கவனம்...