கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள், புத்தக வங்கிகளை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்த மாணவர்களோடு சேர்த்து சுண்டக்காமுத்தூர், குலத்துப்பாளையம் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் உள்ளிடவற்றை வழங்கினார். மொத்தம் 391 மாணவ, மாணவிகளுக்கு 15.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சர் ஆணைக்கிணங்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கோவையில் வருகின்ற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளதாகவும், சுமார் 1,000 மாடுகள் அதில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 72 ஜோடிகளுக்கு 72 சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்க உள்ளதாகவும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் கலாசாரத்தைக் கண் முன் நிறுத்திய பேரணி!