கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டலம் முன்பு, ஒன்று சேர்ந்த துப்புரவுப்பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரியும் ஒப்பந்தப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கூறுகையில், ”கோவை மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப்பணியாளர்கள் துப்புரவுப்பணி அலுவலக உதவியாளர் பணி செய்து கொண்டு வருகின்றனர் இவர்களுக்கு பத்தாண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த முறை மாவட்ட ஆட்சியர் அறிவித்த 731 ருபாய் கூலியும் வழங்கவில்லை.
இதனைக்கண்டித்தும் மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் துப்புரவுப்பணியாளர்களுக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றப்படாததைக் கண்டித்தும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டின்போது இந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், தற்போது உள்ள திமுக அரசு இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன் தீப் சிங் பேடி