கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் தனியார் பவுண்டரி தொழிற்சாலை உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரே கிராமத்தில் தங்கிருந்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்புப் பகுதிகள் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த இரண்டு பெண்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களைப் பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் பெண்கள் இருவரும் பிகாரில் இருந்து நேற்று முன் தினம்தான் வந்ததாகவும், அங்கிருந்து கஞ்சா கொண்டு வந்து சூலூர் பகுதியில் உள்ள வடமாநில இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த சூலூர் காவலர்கள் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.