கோயம்புத்தூர்: நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி அருகே, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் தகவலின் பேரில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குரு சந்திரவடிவேல் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்த மூவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மூவரும் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில், அவர்கள் மருதம் நகரைச் சேர்ந்த சஜீத், பூங்கா நகரை சேர்ந்த விக்னேஷ், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 25 லாட்டரி சீட்டுகள், செல்போன், வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் சஜீத் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச்சேர்ந்தவர் என்றும், கடந்த உள்ளாட்சித்தேர்தலில் பாஜகவுக்காக 10 நாட்களாக முகாமில் தங்கி வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட லாட்டரி, போலி லாட்டரி விற்பனை செய்த விவகாரத்தில் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி சபரி பாலன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல் - இப்படி ஒரு காரணமா?