கோவை திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப்பொறியாளர் சுரேஷ் தொடர்ந்து ஊழியர்களிடம் விரோதமாக நடந்துகொள்வதாகவும் ஊதியத்தை சரிவர தருவதில்லை என்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பலமுறை தொழிற்சங்கங்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பணியாளர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள வட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து நேற்றும் பொறியாளர் சுரேஷ் வராததால் அவரது உருவ பொம்மையை பல்லக்கில் வைத்தாற்போலும், நிர்வாகம் செத்துப்போனது, நியாயம் செத்துப்போனது என ஒப்பாரி வைத்தும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத் துறை பொதுச்செயலாளர் அம்சராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் பணியாளர்களை பணி நீக்கத்திற்கான உரிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து பலமுறை உயர் அலுவலர்களிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்காமல் வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். ஆனால் பொறியாளர் நேற்றைக்கு மாலையே அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் என்று கூறினார். அவர் திரும்பிவந்து தங்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய ஊதியத்தை தரும்வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பத்ம பூஷண் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் யார்?