கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. இன்றிரவு புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் நிலையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வன அலுவலர் அசோக்குமார் பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் வனப்பகுதி அருகே உள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் ரிசார்ட்களுக்கு வனத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், "வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகளில் இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள், வெடிகள் மற்றும் வானவேடிக்கைகள் வெடிக்கக்கூடாது.
அதிக அளவில் கூட்டம் சேர்த்து வாகன நெரிசல் ஏற்படுத்தி வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாத. அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது. Camp Fire பயன்படுத்த கூடாது, வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
மது அருந்திவிட்டு நள்ளிரவில் வனச்சாலைகளில், வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனத்தில் வரக்கூடாது. மது அருந்திவிட்டு, நள்ளிரவில் வாகனம் ஓட்டி செல்வதை அவ்வழியாக செல்லும் வன விலங்களுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற வகையில் அதை கண்காணிப்பது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதி, ரிசார்டுகள், கேளிக்கை விடுதியாளர்களின் பொறுப்பாகும்.
கேளிக்கை விடுதி அருகில் யானை, மான், காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தென்பட்டால் அதை விரட்ட முயற்சிக்காமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனச்சாலையை பயன்படுத்தும் சூழல் இருந்தால், இரவு 8 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தினால் உண்டாகும் கழிவுகள் அனைத்தையும் வனப்பகுதிக்குள் கொட்டாமல் உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி வாழைப்பழ அல்வா தயாரிப்பு தெரியுமா ?