கோவை : கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தொழில்களும் தொழிற்சாலைகளும் முடங்கின. மக்கள் பலரும் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பல்வேறு கட்ட தளர்வுகளின் அடிப்படையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதிலும் பல தொழிற்சாலைகளில் பாதி ஊதியம், பாதி நேர வேலையில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலைகளை முழுமையாக இயக்கி முழு சம்பளம் தர வேண்டுமென பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ரயில்வே துறையில் இம்முறை போனஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று வெளியான தகவல்களை அடுத்து, அனைவருக்கும் கட்டாயமாக போனஸ் வழங்கிட வழியுறுத்தி கோவையில் ரயில்வே தொழிலாளர்கள் (SRMU) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 2019-20ஆம் ஆண்டில் 78 நாள்களுக்கான PLB போனஸை வருகின்ற ஆயுத பூஜைக்குள் வழங்கிட வலியுறுத்தியும், கரோனாவைக் காரணம் காட்டி இம்முறை போனஸ் தர மறுக்கும் மத்திய ரயில்வே துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், நாளை (அக்.20) அகில இந்திய போனஸ் தினத்தை முன்னிட்டு இந்திய ரயில்வே முழுவதும் SRMU பொதுச் செயலாளர் கண்ணய்யா தலைமையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.