கோவை : அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், கோவையிலும் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான indware என்னும் டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட்ஸ் ஆகியவை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த இடங்களிலும் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த குடோன் காலி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு உள்ளவர்களிடம் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.