கோயம்புத்தூர்: தேவேந்திர குல வேளாளர்கள் என்று பல பிரிவுகளை ஒருங்கிணைத்து, அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.06) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இதேபோல், கோவையிலும், காவல் துறையினர் தடையை மீறி பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி கூறியதாவது, “பள்ளர், குரும்பர், பண்ணாடி, காலாடி உள்ளிட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறபிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதனை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களின் போராட்ட வரலாறு தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெருப்பில் கை வைத்திருக்கிறார்.
பூச்சாண்டி காட்டி எங்கள் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. எங்கள் இனம் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலேயே போராடிய இனம், மனசாட்சியுடன் முதலமைச்சர் நடந்துகொள்ள வேண்டும்.
10 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடத்தவிருந்த நிலையில் காவல் துறையினரால் பல இடங்களில் நடைபெறவில்லை. மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் பின்வாங்குகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கோரி ஜான் பாண்டியன் போராட்டம்