கோயம்புத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில், அதன் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் ராணுவ பலத்தை உலகிற்கு காட்டும் வகையிலும் கலாசாரங்களை முக்கியப்படுத்தும் வகையிலும் குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறுகிறது. அதேபோல் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களது தியாகங்களை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களுடைய உருவங்கள் இடம்பெற்ற ஊர்தி இடம்பெறவில்லை. மேற்குவங்காளத்தில் சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் இடம்பெற்ற ஊர்தி, கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு வரலாறு இடம்பெற்ற ஊர்தி இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது நியாயமில்லை. இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது எனப் பிரிவினை நோக்கத்தோடு கூறுவது ஆபத்தானது, தவறான கண்ணோட்டம்.
2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. அலங்கார ஊர்தி என்பது பார்த்தவுடன் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் மூன்று முறை தேர்வுக்கு அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி மாதிரிகள், நிராகரிக்கப்பட என்னக் காரணம், தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான கருப்பொருள் தெரிவித்தார்கள் எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆண்டு இல்லையென்றால் அடுத்த ஆண்டு
தமிழ்நாடு அரசு கொடுத்த காட்சிகள் எப்படி இருந்தது என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது முறையல்ல.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இதை அரசியலாக்கிப் பார்க்கிறார். இது தவறான செயலாகும். இதை அரசியலாக்கக் கூடாது. இந்த ஆண்டு இல்லை என்றால், அடுத்த ஆண்டு அணிவகுப்பு பேரணியில் இடம்பெறலாம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மீண்டும் ஆற்று மணல் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் எந்த ஒரு நடைமுறையும் கடைபிடிக்காமல் பொக்லைன் இயந்திரம் கொண்டு மணல் எடுக்கப்பட்டதால் ஆறுகள் வறண்டு போயின. ஆற்று மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும்.
ஆற்று மணல் எடுக்க பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு ஆற்று மணல் விற்பனையைத் தடை செய்தது. ஆற்று மணலை வைத்து சில பேர் கோடி கோடியாக சம்பாதித்தனர்.
ஆற்று மணலைக் கடத்தி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்வர். எனவே, தமிழ்நாடு அரசு எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் மீண்டும் மணல் குவாரிகளைத் தொடங்க அனுமதிக்கக்கூடாது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Issue of Rejection of TN Freedom Fighters: தமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா? - சீமான் கண்டனம்