தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெகதீசனுக்கு அப்துல்கலாம் விருதினையும் மருத்துவர் ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதினையும், கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர்.ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதினையும், பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கீகார விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பிசியோதெரபி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலம் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
மேலும் கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதால் கைது செய்யப்பட்டனர் என்றார். அவர்களுக்கான கோரிக்கைககள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன் வைக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன. கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை