கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தோட்டங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு உள்ள நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி கோதுமை, பொருட்கள் தரம் அற்றவையாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அரிசி மாற்றி தருவதாக தெரிவித்தனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாரதி கூறியதாவது, இங்குள்ள மக்கள் கூலி வேலைக்குச் சென்று அரசு வழங்கும் ரேஷன் அரிசியை நம்பித்தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் தரமற்ற அரிசி வழங்குவதுடன் முறையாக எங்களுக்கு எவ்விதமான பொருட்களும் வந்து சேர்வதில்லை.
நியாயவிலை கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் எங்களுக்கு வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்குகிறார். எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான பொருள்கள் எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்.